சுத்த நிபாதம் 2.10

உத்தண சூத்திரம்: தொடக்க முயற்சி

எழுந்திரு!
நிமிர்ந்து உட்கார்!
உனக்குத் தூக்கம் எதற்காக?
துக்கம் அனுபவிப்போருக்கு,
அம்பினால் துளைக்கப்பட்டு,
ஒடுக்கப்பட்டோருக்குத்
தூக்கம் ஏது?

எழுந்திரு!
நிமிர்ந்து உட்கார்!
அமைதிக்காக உறுதியாகப் பயிற்சி செய்
மரணத்தின் அரசன் (எமன்) நீ
—விவேகமற்று இருப்பதைப் பார்த்து—
உன்னை ஏமாற்றி
அவன் வசம் கொண்டு போக
விட்டுவிட வேண்டாம்.

பற்றினைத் தாண்டிச்செல்
அதற்கு மனிதரும், தேவலோகத்தவரும்
ஆசைப்பட்டுக் கட்டுப்பட்டுள்ளனர்.
நேரத்தை வீணாக்காதே.
நேரத்தை வீணாகக் கடக்க விட்டவர்கள்
அதை நினைத்து வருத்தப்படுவர், நரகத்தில்.

விவேகமற்று இருப்பது குப்பை,
குப்பை வருவது விவேகமற்றிருப்பதால்,
அதனைத் (குப்பையை) தொடர்வது
விவேகமற்றிருத்தலாகும்.
விவேகத்துடன் இருப்பதாலும்,
உள்ளதை உள்ளபடி
தெரிந்து கொள்வதாலும்
நீ உனது துக்கத்தை
நீக்கிக் கொள்ள வேண்டும்.